வெள்ளத்துடன் வீட்டுக்குள் வந்த பாம்பு தீண்டியதில் இருவர் வைத்தியசாலையில்..!!

யாழ்.கல்லுண்டாய் குடியிருப்பு பகுதியில் பாம்பு கடிக்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த குடியிருப்பு பகுதியில், கனமழை மற்றும் மழை வெள்ளதினால் மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியிருந்தனர். தற்போது வெள்ளம் சிறிதளவு வற்றிய நிலையில்மக்கள் தங்கள் வீடுகளுக்கு பகுதி பகுதியாக திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வீட்டுக்கு சென்ற பெண் ஒருவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நேற்றிரவு 11 மணியளவில்பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் கடித்த பாம்பை கொண்டுவருமாறு வைத்தியசாலையில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாம்பை பிடிக்க முயற்சித்த அயல் வீட்டைச் சேர்ந்தவருக்கும் பாம்பு தீண்டியுள்ளது. அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீடுகளைச் சுற்றி வெள்ளநீர் தேங்கி நிற்பதாலேயே, பாம்புகள் அங்கு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.