வலி கிழக்கு பிரதேச தவிசாளரைக் கைது செய்ய முயற்சி..? குவிந்துள்ள பொலிஸாரால் யாழில் பரபரப்பு..!!

வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளரை கைது செய்வதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு பொலிசார் சென்றுள்ளனர். தமிழ் மக்களின் அதிகார பரவாலாக்கல் விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரமென்பதால், யாழ்ப்பாணத்திலுள்ள பல பிரதேசசபைகளின் தவிசாளர்கள், தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பலர் அங்கு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதேசசபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் மத்திய அரசின் செயற்திட்டத்தை அனுமதியின்றி செயற்படுத்தினார்கள், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதற்கு அடிக்கல் நாட்டினார் என குறிப்பிட்டு, அதிகார பரவலாக்கலை கோரும் தரப்பு கிடைக்கும் அதிகாரத்தை தக்க வைக்க வேண்டுமென குறிப்பிட்டு, அந்த செயற்திட்ட விளம்பரப் பலகையை வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றினார்.

இதையடுத்து, அவர் மீது அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு முறை பொலிசார் வாக்குமூலம் பெற்றனர். இன்று அவரை அச்சுவேலி பொலிஸ் நிலையம் வருமாறு அறிவிக்கப்பட்டது.எனினும், கைது செய்வதெனில் அலுவலகம் வந்து, முறைப்படியான கட்டளைகளை சமர்ப்பித்து கைது செய்யுமாறு நிரோஷ் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் பொலிசார் தற்போது வலி கிழக்கு பிரதேசசபைக்கு சென்றுள்ளனர். அங்கு பல தவிசாளர்கள், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சென்றுள்ளனர். அவர்களிற்கும் பொலிசாரிற்குமிடையில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.இதேவேளை, தவிசாளர் நிரோஷ் அங்கு இல்லை. அவர் பொலிசாரின் கைது முயற்சிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.