சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் சாதனை படைத்த நாஸா விஞ்ஞானிகள்..!!

நாசா விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முள்ளங்கி பயிரை அறுவடை செய்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து பூமியில் இருந்து 408 கிலோ மீட்டர் தூரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவியுள்ளன. அங்கு விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விண்வெளியில் வீரர்களுக்கு பொதுவாக விற்றமின் மாத்திரைகளே வழங்கப்படுவது வழக்கம். ஏனெனில், இங்கிருந்து கொண்டு செல்லப்படும் உணவுகளை அவர் நீண்ட நாட்களுக்கு உட்கொள்ள முடியாது.இந்த சூழலில், விண்வெளி நிலையத்தில் காய்கறி செடிகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்காக குளிர்சாதன பெட்டியுடன் கூடிய இயந்திரம் ஒன்றை உருவாக்கிய அவர்கள், செடிகள் வளர்வதற்கு தேவையான ஒக்ஸிஜன், செயற்கை சூரிய ஒளி போன்றவற்றையும் உருவாக்கினர்.

மேலும், பூமியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண், உரம், பல செடிகளை அந்த இயந்திரத்துக்குள் வைத்து அவர்கள் சோதித்து வந்தனர். அதற்கு தேவையான நீர் உள்ளிட்டவற்றையும் ஊற்றி அவர்கள் பராமரித்த போது, ஏராளமான செடிகள் வளரவில்லை.இந்த நிலையில், நாசா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முள்ளங்கி பயிரை அறுவடை செய்துள்ளனர்.அந்த முள்ளங்கிச் செடியை விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் கடந்த மாதம் 30ஆம் திகதி அறுவடை செய்தார்.இது தொடர்பான புகைப்படம் மற்றும் காய்கறிகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் நேர இடைவெளி வீடியோ காட்சிகளையும் நாசா வெளியிட்டுள்ளது. இதையடுத்து, பலரும் நாசாவுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.