மஹர சிறைச்சாலைக்குள் நடந்த பயங்கரக் கலவரம்..!! வெளியானது அதிர்ச்சிக் காணொளி!

அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 11 கைதிகள் உயிரிழந்த நிலையில், சிறைக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.இதில் கைதிகள் ஒருவரை ஒருவர் துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 29ம் திகதி மஹர சிறைக்குள் கலவரம் ஏற்பட்டிருந்தது. இதன்போது கைதிகள் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில், சிறைக்காவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். அத்துடன் சிறப்பு அதிரடிப்படையினரையும் அழைத்திருந்தனர்.29ம் திகதி மாலை ஏற்பட்ட இந்த கலவரம் 30ம் திகதி அதிகாலை வரையில் தொடர்ந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். இதில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 106 கைதிகள் படுகாயமடைந்தனர்.சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று பரவிவரும் பின்னணியில் இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், சிறைக்குள் தீ வைக்கப்பட்டது.மேலும், சிறைச்சாலைக்குள் தொடர்ச்சியாக அதிகாலை வரையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.எவ்வாறாயினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையினால் எந்தவொரு கைதியும் உயிரிழக்கவில்லை என அரச தரப்பு கூறிவரும் நிலையில், கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டமையினாலேயே இந்த மரணங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறான பின்னணியிலேயே சிறைக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த காணொளி வெளியாகியுள்ளது. இதில் கைதிகள் ஒருவரை ஒருவர் துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.