இந்திய அணிக்காக அறிமுகமாகி தனது முதல் சர்வதேசப் போட்டியிலேயே சாதித்த தமிழன்..!!

இந்திய அணிக்காக தனது முதல் இருபதுக்கு இருபது போட்டியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய, தமிழ் நாட்டைச் சேர்ந்த நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா – இந்தியாவுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது.நாணயச் சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.இதன்படி களமிறங்கிய கே.எல் ராகுல் 51 ஓட்டங்களும், கடைசியில் களம் இறங்கிய ஜடேஜா 23 பந்தில் 44 ஓட்டங்களும் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் குவித்தது இந்தியா.பின்னர் 162 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களம் இறங்கியது. ஆர்கி ஷார்ட், ஆரோன் பிங்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.அவுஸ்திரேலியா 7.4 ஓவரில் 56 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது முதல் விக்கெட்டை இழந்தது. ஆரோன் பிஞ்ச் 26 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை சாஹல் வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்மித்தையும் (12) சாஹல் வெளியேற்றினார்.4ஆவது வீரராக களம் இறங்கிய அதிரடி வீரர் மாக்ஸ்வெல்லை 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில், நடராஜான் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேற்றினார். அப்போது அவுஸ்திரேலியா 10.3 ஓவரில் 75 ஓட்டங்கள் எடுத்திருந்தது.ஹென்ரிக்ஸ் 30 ஓட்டங்களும், ஆர்கி ஷார்ட் 34 ஓட்டங்களும், மிட்செல் ஸ்வெப்சன் 12 ஓட்டங்களும் அடிக்க அவுஸ்திரேலியா அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.சாஹல் 25​ ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், டி நடராஜன் 30 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர். வோஷிங்டன் சுந்தர் 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.இருப்பினும், இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய நடராஜன் தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.