பரிந்துரைகளை மீறி யாழில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு..!! மக்களின் பாதுகாப்பிற்காக நீடிக்குமாறு வலியுறுத்து…!!

வடமாகாண சுகாதார வைத்திய அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.இன்று முதல் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டமை தொடர்பான வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரனுடன் நேற்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.இதன்போது வடமாகாண சுகாதார வைத்திய அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளமையை அறிந்து கொண்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட 16 பேருக்கு சுவிஸ் போதகர் மூலமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.அத்துடன் சுவிஸ் போதகருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட 329 பேரில் 80க்கு மேற்பட்டோர் இன்னமும் பரிசோதனைக்கு உட்படாமலும் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 1200 க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படாமலும் இருப்பதாக வைத்தியர் காண்டீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால், வட மாகாண சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை நீக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.எனினும், வைத்திய அதிகாரிகளின் பரிந்துரைகளை மீறி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கோவிட் -19 க்கான குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எல்லா மருத்துவமனைகளும் தயார் நிலையில் இல்லை.எனவே, நெருங்கிய தொடர்புகளின் பரிசோதனைகளை நிறைவு செய்வதற்கும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாட்களுக்கு நீட்டிக்குமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.