மூன்று பாடசாலைச் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பு.!!

திருகோணமலை மூதூர் பெரியவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். நேற்று (2) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி குறிப்பிட்ட பாடசாலையில் 3ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். இந்த குற்றச்சாட்டில் மூதூர் பாலநகர் பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா (37) என்பவருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் அரச சட்டத்தரணி ஹலீமா பாயிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் நெறிப்படுத்தினார்.சம்பவ இடத்தில் இருந்து திரவம் போலீசாரால் கண்டுபிடிக்க கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. எதிரியின் இரத்த மாதிரியை பெற்று டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், டிஎன்ஏ அறிக்கையை சமர்ப்பித்த இரசாயன பகுப்பாய்வாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

இந்தக் குற்றத்தை சம்பந்தப்பட்ட நபர்தான் செய்தார் என்பது 99 வீதம் நிரூபணமாவதாக அரச சட்டத்தரணி குறிப்பிட்டார். அனைத்து சாட்சியங்களையும் ஆய்வு செய்த நீதிமன்றம், பாடசாலையில் வைத்து மாணவி மீது தகாத முறையில் நடந்து கொண்டவர் எதிரிதான் என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டது.இரு மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தில் எதிரியை மன்று குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.எதிரிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்குமாறும், தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாய் தண்டம் வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் கட்டளையிடப்பட்டது.