இன்று நள்ளிரவில் வவுனியாவை வந்தடையும் புரேவி சூறாவளி !! பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை..!!

கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து மணிக்கு 90 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் புயல் இன்று நள்ளிரவு வவுனியாவை வந்தடையவுள்ளமையினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா. சதானந்தன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது;

இலங்கையின் தென்கிழக்கு திசையில் திருகோணமலையிலிருந்து கடற்பரப்பில் 258 கிலோமீற்றர் தூரத்தில் ஓர் தாழ்வு நிலை உருவாகி தற்போது புயலாக மாற்றமடைந்து இன்று பிற்பகல் 5.30 மணியளவில் திருகோணமலை – முல்லைத்தீவு இடையேயுடாக ஆரம்பமாகி வவுனியா ஊடாக மன்னார் நோக்கி பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதன் வேகமானது மணிக்கு 90 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேக காணப்படலாம். இன்று பிற்பகல் 5.30 மணிக்கு பிற்பாடு இலங்கையினை அண்மித்து இன்று நள்ளிரவு பகுதியில் வவுனியாவில் தாக்கங்களை ஏற்படுத்தி நாளை அதிகாலை மன்னாரை சென்றடைய கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது.இந்த காலப்பகுதியில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவிலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.மேலும் கடல்சார் ஊழியர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென கேட்டுகொள்ளப்படுவதுடன் வவுனியா தொடக்கம் மன்னார் வரையிலான பகுதியில் இன்று நள்ளிரவு தொடக்கம் நாளை காலை வரையில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காணப்படும்.

எனவே, தகரக்கொட்டகைகளின் கூரைகள் தூக்கி விசப்படும் நிலமையும் காணப்படுகின்றது. எனவே மக்கள் அலட்சிய போக்காக செயற்படாமல் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.