முல்லைத்தீவிற்கு தெற்கே 35 கிலோமீற்றரில் கரையைக் கடக்கின்றது புரேவிப் புயல்..!!

முல்லைத்தீவிற்கு தெற்கே 35 கிலோமீற்றர் தெற்கில் புயல் நிலப்பகுதிக்குள் நகர்வதாக யாழ் பல்கலைகழக புவியியல் துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எல்லை இன்று மாலை 6.00 மணியளவில் முல்லைத்தீவு நகருக்கு தெற்கே 35 கி.மீ. தூரத்தில் நிலப்பகுதிக்குள் நகர்கின்றது.எனவே, கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும். இப்போது கிடைத்து வரும் கனமழை நீடிக்கும்.புரெவிப் புயலின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.காற்றின் வேகமும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.காற்றின் வேகம் காரணமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதன்மை வீதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதி ஓரமாக இருந்த ஒன்று வீதியின் குறுக்கே விழுந்து உள்ளது. இதனால் சற்று நேரம் வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் பொதுமக்கள் பொலிசார் மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளார்கள்.தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டுள்ளது படையினரும் பொதுமக்களும் பிரதேச சபையினரும் இணைந்து குறித்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளார்கள்.தொடர்சியாக கடல் அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதேவேளை கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் நடவடிக்கையில் பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.இன்று இரவு கடக்க இருக்கின்ற புயலால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர் கொள்ளக்கூடிய வகையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினருடன் முப்படையினரும் இணைந்து பணியாற்றி வருகின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கட்டளையிடும் அதிகாரியாக மாவட்ட செயலாளர் க.விமலநாதன் திணைக்கள உத்தியோகத்தர்களை வழிநடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.கரையோரங்கள் ,மற்றும் தாழ்நில பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் தயார் நிலையில் 24 மணி நேரமும் கடமையாற்ற ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள்.