புரேவிப் புயலுக்கு முன்னரே முல்லைத்தீவில் அனர்த்தங்கள்!! பிரதான வீதிக்கு குறுக்காக வீழ்ந்த மரத்தினால் போக்குவரத்துக்கள் பாதிப்பு..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தண்ணீறூற்று நெடுங்கேணி பிரதான வீதியில் களிக் காட்டுப் பகுதியில் வீதிக்கு குறுக்காக மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால், குறித்த வீதி ஊடான போக்குவரத்து சுமார் அரை மணி நேரமாக தடைப்பட்டிருந்தது.முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில் காற்றும் வீசி வருகின்றது. இந்நிலையில் வீதியோரத்தில் நின்ற பாரிய மரமொன்று வீதிக்கு குறுக்காக சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து வீதியால் வந்த வாகன சாரதிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மரத்தினை அகற்றியதோடு, அரை மணி நேரத்தின் பின்னர் வீதியினூடாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது.