தற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்!!

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடும் போது;

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் தனக்கு காய்ச்சல் உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் தாயாருக்கு அறிவித்துள்ளார்.அதனால், தாயார் அவரை யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று அல்லைப்பிட்டியிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர் அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இன்று பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், இளைஞனின் தாயார் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.