யாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் குழல் பிட்டின் மகிமை.!

யாழ்ப்பாணத்தில் முதலில் குடியேறியவர்கள் சேரநாட்டில் இருந்து வந்த மலையாளிகள் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். கேரள நாட்டை விட்டு வெளியேறிய மலையாளிகளில் சிலர் 20 மைல் அகலமுடைய பாலைக்காட்டு கணவாய் ஊடாக வந்து, வியாபாரப்பாதையை அடைந்து, யாழ்ப்பாணம் சென்று அங்கு குடியேறினார்கள்.சிலர் அதே கணவாய் ஊடாகச் சென்று கொல்லிமலை பச்சைமலை சவ்வாதுமலைகளில் மறைமுகமாக குடியேறி வாழ்ந்தார்கள். வேறு சிலர் கடல் மார்க்கமாக கன்னியாகுமரி காயல்பட்டினம் இராமேஸ்வரம் மாந்தை வழியாக வந்து யாழ்ப்பாணத்திலும், தென் இலங்கையிலும் குடியேறினார்கள்.இதனால் தானோ என்னவோ, யாழ்ப்பாணம் மற்றும் கேரள உணவுப் பழக்க வழக்கம் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளமை சிறப்பான விடயமாகும்.யாழ்ப்பாணத்தில் புட்டு பிரதானமான உணவாகும். புட்டுக்கு சம்பல் பொரியல், குழம்பு மற்றும் பழவகைகளான வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், போன்றவை பக்க உணவுகளாகும்.

அதேபோன்று தான் குழல் புட்டுக்கும் பக்க உணவுப் பதார்த்தங்களைப் பயன்படுத்துவார்கள்.அரிசி மாவுடன் (தற்காலத்தில் சம பங்கு கோதுமை சேர்ப்பது வழக்கம்.) உப்புச் சேர்த்து சுடுதண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைவார்கள். பின்னர் சரியான பதத்தில் கொத்துப் பேணியால் (தற்காலத்தில் சில்வர் பேணி பயன்படுத்துவது வழக்கம்.)கொத்துவார்கள்.முன்னர் சுளகிலேயே புட்டுக் கொத்தி, கொளித்து இன்னொரு பெட்டியில் போடுவார்கள்.இப்போது அப்படி செய்வது மிகக் குறைவாகும்.ஓலைப் பெட்டிகளின் பாவனை மிகவும் குறைந்து விட்டமை கவலையளிக்கக் கூடியது.நல்ல இனிப்பான தேங்காயை உடைத்துத் திருவி வைத்துக் கொள்வார்கள். யாழ்ப்பாணத்தில் சில மரத் தேங்காய்களை குழல் புட்டு, பால் அப்பம் செய்வதற்கு மாத்திரம் உபயோகப்படுத்துவார்கள். அத்தென்னை மரங்களின் காய்கள் நல்ல சுவையானவை.அடுப்பில் புட்டுப் பானை வைத்து, அதில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடுவார்கள். புட்டுப் பானை நன்றாகக் கொதித்ததுடன் மூங்கில் குழாயில் தும்புக் கயிறு சுற்றப்பட்ட புட்டுக் குழலில் குழைத்த மாவையும், தேங்காயையும் மாறி, மாறிப் போட்டு அவித்து எடுப்பார்கள்.ஆனால், தற்காலத்தில் அலுமினிய மற்றும் சில்வர் புட்டுக் குழல்களே பெருமளவில் பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.