அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்..முறையான ஆட்சி மாற்றத்திற்கான படிமுறைகளை ஆரம்பிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம்..!!

தனது நிர்வாகம், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் மாற்றுக் குழுவுடன் ஒத்துழைத்து செயற்படத் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று தெரிவித்துள்ளார்.ட்ரம்ப் தனது தேர்தல் தோல்வியில் அதிருப்தியடைந்து பல்வ‍ேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வந்த நிலையில், குடியரசுக் கட்சியின் தொடர் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மிச்சிகன் நிர்வாகம், மாநிலத்தின் தேர்தல் முடிவுகளை சான்றளித்ததும், குடியரசுக் கட்சி செனட்டர்கள், வணிகத் தலைவர்களுடன் சேர்ந்து, ட்ரம்ப்பை மாற்றத்தைத் தொடங்குமாறு அழுத்தம் கொடுத்த நிலையிலேயே ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.அத்துடன் ட்ரம்பின் இந்த அறிவிப்பானது தேர்தலுக்கு 20 நாட்களுக்குப் பிறகும், ட்ரம்பிற்கு நீதிமன்றத் தோல்விகளைத் தொடர்ந்தும், ஜோர்ஜியா மற்றும் மிச்சிகன் போன்ற முக்கிய மாநிலங்களில் பிடனின் வெற்றிக்கான சான்றிதழைத் தொடர்ந்தும் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்க, டொனால்ட் டிரம்ப் சம்மதித்து இருக்கிறார்.எனினும், தாம் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக அவர் இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை.அதிபர் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்ப்பேன் என உறுதியாகக் கூறியுள்ள போதும், பைடன் அதிபர் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசு அமைப்பிடம் பரிந்துரைத்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் டிரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அதிபர் அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த நடவடிக்கைகளை அமைப்பு தொடங்கும் என்றும் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அதிபராகத் தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு 6.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஜி.எஸ்.ஏ நிர்வாகி எமிலி மர்ஃபி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் மிஷிகன் மாகாணத்தில், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது டிரம்புக்கு பெரிய அடியாக அமைந்தது.ஜோ பைடன் அணியினர், இந்த அதிகார மாற்றத்தின் தொடக்கத்தை வரவேற்று இருக்கிறார்கள்.கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும், நாடு சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், இன்று எடுத்திருக்கும் முடிவுகள் அவசியமான ஒன்று என ஜோ பைடன் அணியினர் கூறி இருக்கிறார்கள்.இந்த இறுதி முடிவு, அரசு அமைப்புகள் முறையாக அதிகார மாற்றத்தைத் தொடங்க, ஓர் உறுதியான நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எனவும் கூறி இருக்கிறது பைடனின் தரப்பு.இந்த மாத தொடக்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் டிரம்ப் 232 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்று இருக்கும் நிலையில், பைடன் மொத்தம் 306 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்று இருக்கிறார் என்று கணிக்கப்பட்டுள்ளது.இது அதிபர் பதவிக்கு வர வெல்ல வேண்டிய 270 எனும் எண்ணிக்கையை விட மிக அதிகம்.நாடு முழுவதும் பதிவான வாக்குகளில், டிரம்பைவிட பைடன் 59 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

– BBC Tamil