மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்கக் கோரும் மனுக்களை மீளப் பெற்ற பருத்தித்துறைப் பொலிஸார்..!!

மாவீரர்தினத்திற்கு தடைகோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி பொலிசார் தாக்கல் செய்த மனுக்களை மீள பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த வாரம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பிரகாரம், வழக்கை வாபஸ் பெறுவதாக இன்று (23) பருத்தித்துறை நீதிமன்றத்தில் பொலிசார் அறிவித்தனர். மாவீரர்தினத்திற்கு தடைகோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி பொலிசார் வழக்கு தாக்கல் செய்ய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த திடீர் திருப்பம் நிகழ்ந்தது.எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் உள்ளிட்டோரை பிரதிவாதியாக குறிப்பிட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரதிவாதிகள் தரப்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையானார். அத்துடன், வி.மணிவண்ணன், கே.சுகாஷ், என்.சுஜீவன், சந்திரசேகரம், குகதாஸ் ஆகியோரும் முன்னிலையாகினர்.பதில் நீதிவான் முத்துகுமார் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.நினைவேந்தலிற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிசார் மனு செய்தனர்.இதன்போது சமர்ப்பணம் செய்த மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, குற்றவியயல் சட்டக்கோவை 106 இன் கீழ் இந்த தடை உத்தரவை பெற முடியாது, அதற்கு சட்ட அடிப்படை கிடையாது. பொதுத்தொல்லைகள் கட்டத்தின் கீழ் வேறு விவகாரங்களே கையாள முடியும், இது நினைவேந்தல் தொடர்புடையது என குறிப்பிட்டதுடன், இதற்கு ஆதாரமாக இலங்கை, இந்திய உயர்நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை சான்றாக சுட்டிக்காட்ட முடியுமென்றார்.இந்த சட்டப் பிரிவை பொலிசார் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்கிறார்கள், சில நீதிமன்றங்களின் ஊடாக தடை செய்துள்ளனர். இந்த விடயத்தில் திட்டவட்டமான முடிவொன்றை எட்ட வேண்டுமென்றார்.எனினும், நிரந்தர நீதிபதி முன் வழக்கை ஒத்திவைக்க விரும்புவதாக தெரிவித்து, தவணையிடுவதாக தெரிவித்தார்.அப்போது, சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, இந்த விவகாரத்தில் பொலிசார் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினரை முன்னிலையாகுமாறும், அவ்விதம் அவர்கள் ஆஜரானால் இரு தரப்பு வாதங்களின் பின் நீதிமன்றம் திட்டவட்டமாக முடிவை அறிவிக்கலாமென்றார்.இதன்போது, வழக்கை மீளப்பெறுவதாக 3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் அறிவித்தனர்.இதில், தமக்கு ஆட்சேபணையில்லையென தெரிவித்த சட்டத்தரணி சிறிகாந்தா, என்ன காரணத்திற்காக அவர்கள் வழக்கை மீளப்பெறுகிறார்கள் என்பது தெரிவிக்கப்பட வேண்டும், நினைத்த நேரத்தில் மனு செய்து, நினைத்த நேரத்தில் வாபஸ் பெற முடியாது என்றும், அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டுமென்றார்.அதன்போது, தாம் கலந்தாலோசிக்க வேண்டுமென பொலிசார் தெரிவித்ததையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுமார் 20 நிமிடங்களின் பின்னர் வழக்கு மீள எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சில தினங்களின் முன் யாழ் மேல் நீதிமனத்தினால் இதேவிவகாரத்தில் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கருத்தில் கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதாக பொலிசார் அறிவித்தனர்.அதனைப் பதிவு செய்த நீதிபதி, 3 வழக்குகளையும் மீளப்பெற உத்தரவிட்டார்.