கடந்த வாரம் உயிரிழந்த யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனின் மரணத்தில் சந்தேகம்..!! நீதி விசாரணை கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சகோதரன்..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணத்தின் மிகுந்த சந்தேகம் இருப்பதனால், இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு அவருடைய சகோதரன் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 17. 11. 2020 அன்று கோண்டாவில் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி நின்ற நிலையில் மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.இம் மரணத்தில் தனக்கு மிகுந்த சந்தேகம் இருப்பதனால் அவருடைய சகோதரன் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி சர்வேந்திரசில்வா ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இம் மரணத்தில் மிகுந்த சந்தேகம் இருப்பதனாலும், பொலீசார் இம் மரணத்தினை தற்கொலை எனும் ரீதியில் விசாரணை மேற்கொண்டுள்ளமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதனால், இவ்விடயத்தினை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்தி உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கான நீதியை பெற்றுத் தருமாறும், இனிவரும் காலங்களில் மருத்துவ பீடத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு ஆவண செய்யுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.