எத்தனை தடைகள் வந்த போதிலும் தனது விடா முயற்சியினால் குப்பிவிளக்கில் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த முல்லை மாணவி.!!

நாட்டில் யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மின்சார வசதியின்மை இருக்க தான் செய்கிறது.பொருளாதாரத்தால் மிகவும் பின்னடைந்த நிலையிலான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அபிவிருத்தி..அபிவிருத்தி என கூவி கொண்டு தேர்தல் காலங்களில் வாக்கு கேட்பவர்கள் எல்லாம் தேர்தல் முடிவடைந்ததும் கூண்டுக்குள் அடைந்து விடுகிறார்கள். ஆனால் எமது மக்களிடம் உள்ள ஒரே ஒரு பலம் கல்வி. அதனை எப்போதும் கையிலெடுக்க எமது பிள்ளைகள் தவறுவதில்லை.

நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரீட்சை பரீட்சையில் சித்தியடைந்த பல்வேறுதரப்பட்ட மாணவர்களினது கதைகளை பார்க்க முடிகிறது.இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் குப்பி விளக்கில் படித்து மாணவி ஒருவர் அம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை சித்தி பெற்று சாதித்துள்ளார்.உடையார் கட்டு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையின் மாணவி நிசாந்தன் நிதர்சனாவே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 13 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.இவர்களில் நிசாந்தன் நிதர்சனா என்ற மாணவி 194 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்துள்ளார்.நாளாந்தம் கூலிதொழில் செய்து வாழ்ந்து வரும் குடும்பத்தில் முதற் பிள்ளையாக பிறந்த நிதர்சனா சிறுவயதில் இருந்து பாடசாலையில் இடம்பெறும் பரீட்சைகளில் முதல் நிலையினை பெற்று பாடசாலையில் போட்டிகளிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வரும் இந்த மாணவியின் வீட்டிற்கு இதுவரை மின்சார இணைப்பு பெற்றுக்கொள்ள முடியவில்லை.வீட்டில் இருந்து 50 மீற்றர் தொலைவு வரை மின்சார இணைப்பு வந்துள்ள போதும் இவர் மின்சாரம் இல்லாத வீட்டிலேயே குப்பி விளக்கில் கல்விகற்று சித்தியடைந்துள்ளார்.எந்தவித பிரத்தியேக வகுப்புக்களுக்கும் செல்லாமல் பாடசாலை கல்வியும் வீட்டுக்கல்வியுமாக கல்விகற்று வந்த மாணவி கொரோனா காலத்தில் பாடசாலை இல்லாத நிலையில் தொலைபேசி ஊடக ஆசிரியர்கள் அனுப்பும் வினாக்கொத்துக்களை சரியாகப் படித்து விடை எழுதியதுடன் சந்தேகங்களை பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்டு கல்வி கற்று இந்த சாதனையினை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தான் ஒரு சிறந்த சட்டத்தரணியாக வந்து கிராமத்தில் பணிசெய்யவேண்டும் என்றும் நிதர்சனா தெரிவித்துள்ளார்.குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
குறித்த மாணவியின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவ முன்வரவேண்டுமென நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.