இலங்கையில் விரைவில் அறிமுகமாகும் ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்..!!

ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டமொன்று விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்த வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஜெகத் பி. விஜேவீர, நெறிமுறை ஊடகம் பற்றிக் கற்பதற்கான ஊடக கல்லூரியொன்று அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெகுஜன ஊடகத்துறை அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, கெஹலிய ரம்புக்வல, பாராளுமன்ற உறுப்பினர்களான இசுரு தொடங்கொட, குணதிலக ராஜபக்ஷ, சாகர காரியவசம், ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசியம் காணப்படுவதாகவும், இதற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் உரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதன்போது வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்தார்.சமூக ஊடகங்களால் இனங்களுக்கிடையில் குழப்பத்தைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் இங்கு தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனை ஆராய்ந்து இங்கு புதிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.குடிமக்களின் சுயமரியாதையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் பத்திரிகைக் கவுன்சில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும், வெகுஜன ஊடகங்களால் சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் குறிப்பிட்டார். தேவையற்ற விதத்திலான சேறுபூசும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கு வெகுஜன ஊடகங்களுக்கான ஒழுங்குபடுத்தலொன்று அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.பத்திரிகைக் கவுன்சில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடுவதன் ஊடாக அதற்கான செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் என இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் கூறினார். தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான முறைமையொன்று கொண்டுவரப்பட வேண்டும் எனவும் பேராசிரியர் வலியுறுத்தினார்.இது தொடர்பான திருத்தத்தை அமைச்சுசார் ஆலோசனைக் குழு சபையில் சமர்ப்பித்த பின்னர் அதனை சட்டவரைபுக் குழுவுக்கு அனுப்புவது இலகுவான செயற்பாடாக இருக்கும் என்றும், சட்டமூலத்தை தொழில்நுட்ப குழுவுக்கு ஆற்றுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.வெகுஜன ஊடக நிறுவனங்களில் சுய தணிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் 2015ஆம் ஆண்டு கலந்துரையாடப்பட்டதாகவும், இதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார இங்கு தெரிவித்தார். ஊடகங்களால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு மகத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், ரூபவாஹினி அலைவரிசையின் ஊடாக பாராளுமன்ற அமர்வுகள் ஒளிபரப்பப்படுவதை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஊடகத்துறையுடன் தொடர்புபட்டவர்களை தொழில்சார் நிபுணர்களாக ஏற்றுக்கொள்வது, ஊடகவியலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்தல், பொதுமக்கள் தொடர்பாடல் குறித்த பட்டதாரிகளை துறைசார்ந்த தொழிலுக்கு அனுப்புதல், ஊடகக் கல்வி குறித்த பாடநெறியைக் கற்பிப்பதற்கு பாடசாலைகளில் ஆசிரியர்களை நியமித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.அரசாங்க தொலைக்காட்சிகளில் தரத்தை உருவாக்குவதன் அவசியம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டரா அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு கடந்த நான்கு வருடங்களில் 6 தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், 2014 ஆண்டில் குறித்த தொலைக்காட்சி அலைவரிசை கணக்கெடுப்புக்களில் முதலாவது இடத்தில் இருந்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல சுட்டிக்காட்டினார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசாங்க ஊடகங்கள் நஷ்டம் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், இவற்றை இரண்டு வருடங்களுக்குள் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.ஊடகவியலாளர்கள் கல்விசார் புலமைப்பரிசில்களைப் பெறுவதற்கும், ஊடக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் இலகு கடன்கள் வழங்கப்படுவதாகவும், ஊடகவியலாளர்கள் சார்பில் நலன்புரி வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கத் தயார் இல்லையென்றும், சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.செய்திகளின் போது பயன்படுத்தப்படும் மொழியின் தரம் தொடர்பில், ஆராய வேண்டியிருப்பதாகவும், இதற்கான வழிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன சுட்டிக்காட்டினார்.ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டமொன்று விரைவில் தொடங்கப்படும் என்றும், நெறிமுறை ஊடகம் பற்றிக் கற்பதற்கான ஊடக கல்லூரியொன்று அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஜெகத் பி. விஜேவீர தெரிவித்தார்.வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தலையீடு செய்யுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கைவிடுத்தார்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனைக் குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டார்.தபால் துறையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் கடிதங்களை விநியோகிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. உபதபாலகங்களை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் அடுத்தவருடம் ஆரம்பிக்கப்படும் என்று தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இங்கு தெரிவித்தார்.