கொரோனாவைத் தொடர்ந்து யாழிலும் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்..!!

நாட்டில் கொரோனாஅச்சம் காரணமாக அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாடு பூராகவும் தரம் 6 தொடக்கம் 13 வகுப்பினருக்கு பாடசாலை ஆரம்பிக்கின்ற நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் இன்று கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளன. மாணவர்கள் வழமைபோன்று பாடசாலைகளுக்கு சமுகமளிக்கின்றனர் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாட்டின் 10 ஆயிரத்து 165 அரச பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 13 வரை உள்ள 5 ஆயிரத்து 233 பாடசாலைகள் உள்ளன. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாணத்தில் 5 பாடசாலைகளும், வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளும், சப்ரகமுவா மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அதிக ஆபத்தில் உள்ளன. அவை தவிர்ந்த ஏனைய பாடசாலைகள்தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 15/2020 இன் படி மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைத்து மாகாண, வலய மற்றும் கோட்டத்தில் உள்ள கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, சுகாதார மேம்பாட்டுக் குழுவின் அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவதற்கும் தகுந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நாட்டில் நிலவும் சூழ்நிலையை எதிர்கொண்டு பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவில் சில பகுதிகளிலிருந்து விமர்சனங்கள் எழுந்த போதிலும், மாணவர்களின் நலனுக்காகவும், தவறவிட்ட கல்வியை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.