கொரோனா காவிகளாக இலங்கையின் பல பாகங்களிலும் பலர் நடமாட்டம்..பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் உடம்பில் உள்ளவர்கள் இன்றும் வெளியில் சுற்றித் திரிகின்றார்கள். எனவே, அவர்களை இனங்காண பி.சி.ஆர். பரிசோதனைகளை மூலைமுடுக்கெல்லாம் விஸ்தரிக்க வேண்டும். இல்லையேல் தற்போது நிலவும் பேராபத்து தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது;கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குறைந்தளவில் இனங்காணப்படும் மாவட்டங்கள் தொடர்பில் குறைந்த அவதானம் செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அங்கு ஆபத்தான நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.தற்போது நாளாந்தம் 500 புதிய தொற்றாளர்கள் பதிவாவதுடன் 3 அல்லது 5 மரணங்கள் பதிவாகின்றன. மேல் மாகாணத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அதிலும் கொழும்பு மாவட்டத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது.நாட்டில் கொரோனா வைரஸ் உடம்பில் உள்ளவர்கள் இன்றும் வெளியில் சுற்றித் திரிகின்றார்கள். அவர்கள் அனைவரும் இனங்காணப்பட வேண்டும். இல்லையேல் பேராபத்து தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.