கொரோனாவினால் நடந்த விசித்திரத் திருமணம்.!!

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாசம். அவருக்கும் அல்மாஸ் என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் துபாயில் திருமணம் நடைபெற்றது.கேரளாவைச் சேர்ந்த மணமகள் அல்மாஸ் இங்கிலாந்தில் இறுதியாண்டு மருத்துவப் படிப்பை மேற்கொண்டுள்ளார். மணமகனின் தங்கையும் மணமகளும் உடன் கல்வி பயின்ற தோழிகள்.

துபாய் நியூ இந்தியன் மொடல் பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்களான மணமக்கள், கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு வித்தியாசமான திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். திருமண பத்திரிகை வட்ஸ்அப் வழியாக அனுப்பப்பட்டது. பலர் தங்களது வாழ்த்துகளை வட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தனர்.நேரில் வாழ்த்துச் செல்ல வருவோருக்கு வேறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவர்கள் வசித்து வரும் ஜுமைரா பகுதியில், வீட்டுக்கு வெளியே அலங்கார வளைவு அமைக்கப்பட்டது. வளைவுக்கு அருகில் மணமக்கள் இருவரும் நின்றிருக்க, அந்தப் பகுதியில் காரில் வந்த உறவினர்களும், நண்பர்களும் காரிலிருந்து இறங்காமல் தொலைவிலிருந்தே வாழ்த்துகளைக் கூறி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.இந்தத் திருமண வரவேற்பு ஏற்பாடு சமூக ஊடகங்களில் பலராலும் பாராட்டப்படுகிறது.