கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தான நிலைமைக்கு அமைய பிரதேசத்தில் சன நடமாட்டத்தை குறைக்க அதிகாரிகள் துரிதமாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.


கொழும்பு மேயர், சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள தகவல்களை கவனத்தில் எடுத்து கொண்டால், கொழும்பில் ஏற்பட்டுள்ள ஆபத்து தெளிவானது.
புள்ளி விபரங்களை எடுத்துக்கொண்டால், அதிகளவான நோயாளிகள் கொழும்பு நகர எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரமே ஆபத்தான மையமாக மாறியுள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பகுதிகளை முகாமைத்துவம் செய்வது குறித்து விசேட கவனத்தை செலுத்த வேண்டும்.கொழும்பு நகருக்கு சுதந்திரமாக மக்களை நடமாட அனுமதித்தால், ஏனைய மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் அதிகம்.மக்கள் நடமாட்டத்தை குறைப்பது சம்பந்தமான தீர்மானத்தை உடனடியாக எடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.