தடைகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் சந்தோசத்தை அதிகரிக்கும் தீபாவளி திருநாள்.!!

தீபாவளி பண்டிகை என்பது மக்கள் மனதில் உள்ள இருளையும், அகந்தை, ஆணவம்,தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை, ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றுவதே ஆகும். சுருங்கச்சொன்னால் இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் தீப ஒளித்திருநாள் என்பர்.தீமையை விலக்கும் உண்மையாகவும் இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்கிறோம்.புராணங்களில் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட தீபத்திருநாளே இன்று தீபாவளியாகிவிட்டது.

இந்தத் தீபாவளி திருநாள்.புராணங்களின் படி,மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்த நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தார். அப்போது நரகாசுரன் இறக்கும் போது கிருஷ்ணனிடம், தான் இறக்கும் இந்த நாளை மக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அன்று முதல் மக்கள் தீபாவளியை விளக்குகளால் ஒளி ஏற்றி பெரும் பண்டிகையாகக் கொண்டாடி வருகின்றனர்.இறைவன் அசுரனை அழித்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தின் பின்னணியில் ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது. அதாவது நம் உள்ளத்தில் எழும் காம,குரோத,பாப குணங்களான அழுக்குகளை நீக்கி சத்வ குணமான நல்ல மனதைப் பெற வேண்டும் எனும் செய்தியை மக்களுக்கு உணர்த்துவதே அந்தத் தத்துவம். எங்கெல்லாம், அநீதி தழைத்தோங்கி தர்மவாழ்வு சிதைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இறைவன் தோன்றி அதர்மம் செய்பவர்களை அழித்து நல்லோரை வாழ்விக்கிறான் என்பதற்கு எடுத்துக் காட்டாக தீபாவளி திருநாள் அமைந்திருக்கிறது.தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான ஒரு போராட்டத்தில், எத்தகைய நிலையில் தர்மம் வெற்றி பெறுகிறது என்பதை இது சொல்கிறது. இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் தீபாவளி ஓர் உன்னதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. அறியாமை இருள் அகன்ற நாள் அறிவொளி பரந்த நாள், அசுர குணங்கள் தேய்ந்து விலகிய நாள், தெய்வீகம் பொங்கிப் பிரவாகித்த புனிதநாள். அகந்தை ஒழிந்த நாள். அருளும், கருணையும் மறுமலர்ச்சி பெற்ற நாள். அச்சம் கழிந்த நாள்,அமைதி பிறந்த நாள், தீயனவெல்லாம் தொலைந்த திருநாள் என்றெல்லாம் சிறப்புப் பெறுகிறது