வீட்டிலிருந்தே விரதங்களை கடைப்பிடியுங்கள்.. சைவ மகா சபை வேண்டுகோள்

கொரோனாவினுடைய 2ம், 3ம் அலையில் உலகமே ஆட்பட்டு உள்ள இந்த நிலையில் எம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ள முழுமையான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்துலக இந்துமக்களுக்கு சைவ மகாசபை விசேட செய்திக்குறிப்பின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த வேளையிலே கேதார கெளரி விரத நிறைவு, தீபாவளி பண்டிகை , கந்த சட்டி விரதம் ஆகியவற்றை நாம் பக்திபூர்வமாக எமது குடும்ப உறவுகளுடன் வீட்டிலிருந்து கடைப்பிடிக்க சைவத் தமிழர்களாகிய நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம்.இறை சிவனையும் அம்பாளையும் முருகப் பெருமானையும் கண்ணபிரானையும் மனம் மெய் மொழிகளால் வீட்டிலிருந்து வழிபடுவோம்.கேதார கௌரி விரதம் அனுட்டிக்கும் எம் மாதரசிகள் அனைவரும் இறை சிவனை நினைந்து அன்னை பராசக்தி தானே பூசை செய்து வழிபட்டது போன்று வீட்டிலிருந்து பூவும் நீரும் கொண்டு பஞ்ச வில்வங்களில் ஒன்றையோ அல்லது ஏதாவது ஒரு பச்சிலையை இட்டோ வழிபடுமாறு வேண்டுகின்றோம்
திருநாவுக்கரச நாயனரின் தேவாரத்திலுள்ள போற்றித் திருத்தாண்டகத்தையோ அல்லது மணிவாசகரின் திருவாசகத்திலுள்ள போற்றித் திருவகவலையோ அல்லது பன்னிரு திருமுறைகளில் ஏனைய திருப்பதிகங்களிலுள்ள போற்றிகளையோ கூறி பூ / வில்வம் / பச்சிலை சாத்தி வழிபடலாம்.அதே போன்று கந்த சட்டி அனுட்டிப்பவர்கள் கந்த சட்டி கவசம் மற்றும் அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி ஆகியவற்றை வீட்டிலிருந்து மனமுருகிப் பாடி முருகப்பெருமானை வழிபடலாம்.தீபாவபளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறே களியாட்டங்களில் ஈடுபடாது குடும்ப உறவுகளோடு பகிர்ந்து உண்டு இறை பிரார்த்தனையுடன் மன நிறைவாகக் கொண்டாடுவோம்.இந்தக் கொடிய நோயிலிருந்து எம் அனைவரையும் காப்பாற்ற இறைவனை மனம் உருகி பிரார்த்திப்பதுடன் அதற்குரிய அர்ப்பணிப்பை நாம் அனைவரும் வெளிக்காட்டுவோம். ”இன்பே சூழ்க எல்லோரும் வாழ்க.”

– அகில இலங்கை சைவ மகா சபை