த.ம.வி.புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் சற்று முன்னர் திடீர் கைது.!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், சிஐடியினரால் சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியத்தை அச்சுறுத்தியதாக தெரிவித்து, கொழும்பில் இருந்து வந்த சிஐடி அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், இதற்கு முன்னர் குறித்த கொலை சம்பவம் தொடர்பாக பிரசாந்தன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பாடசாலை ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது சாட்சியங்களை பிரசாந்தன் அச்சுறுத்தவதாக, கொலையுண்டவரின் சகோதரி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சட்டமா அதிபரின் உத்தரவிற்கமைய பிரசாந்தன் கைதாகியுள்ளார்.கடந்த பொதுத்தேர்தலில் ராஜபக்சக்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர், கோட்டாபய ஆட்சியில் அமர்ந்ததும் பிள்ளையான் விடுதலையாவார் என பகிரங்கமாகவே கூறி வந்தனர்.எனினும், பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய நிலைமை தென்படாத நிலைமையில், தற்போது கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கைதாகியுள்ளார்.