சானிடைசர், முக கவசம் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை.!!

கொரோனா தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம்,சானிடைசர் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. ஆனால் இதை அதிகம் பயன்படுத்தினால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.கொரோனா தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம் அணிவது அவசியமாகிவிட்டது. அதேவேளையில் இறுக்கமான முக கவசங்களை அணிவது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், எரிச்சல்,சொறி ஏற்படுதல் போன்ற பிரச் சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.


அதிக நேரம் முக கவசம் அணியும்போது முகத்தில் வெளியேறும் வியர்வை அப்படியே அதில் படிந்திருக்கும். அதனால் வீட்டிற்கு வந்ததும் முகத்தை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். சுடுநீரில் ஆவி பிடிப்பதும் நல்லது.அது சரும துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவும். முகத்தை சுத்தம் செய்த பிறகு, மாய்ஸ்சரைசர் தடவுவதும் நல்லது. அது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். அதிலும் வறண்ட சருமம் கொண்டவர்கள் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியமானது. எண்ணெய் பசை அல்லாத மாய்ஸ்சரைசரை தேர்வு செய்யலாம். முக கவசம் அணிந்திருந்தாலும் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் தடவுவதும் நல்லது. அது சருமம் வறட்சிக்குள்ளாகாமல் பாதுகாக்க உதவும்.கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக கை கழுவும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. வைரஸ் கிருமிகள் பரவுவதை தவிர்க்க சோப்பு கொண்டு கைகளை அடிக்கடி கைகழுவவும், ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. சானிடைசர் கையடக்கமாக இருப்பதாலும், வெளி இடங்களுக்கு செல்லும்போது பயன்படுத்துவதற்கு சவுகரியமாக இருப்பதாலும் நிறைய பேர் அதனையே பயன்படுத்துகிறார்கள். சோப்பு கொண்டு கைகளை கழுவும்போது படியும் ஈரப்பதத்தை துடைக்க வேண்டியிருக்கும். ஆனால் சானிடைசரை கைகளில் தடவியதும் சட்டென்று உலர்ந்துவிடும் என்பதால் அது பெரும்பாலானோரின் விருப்ப தேர்வாக மாறிவிட்டது.வெளியே சென்று வந்ததும் கைகளை கழுவுவதற்கு சோம்பல் கொண்டு சானிடைசர் பயன்படுத்துபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால் சானிடைசரின் பயன்பாடு அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சானிடைசரை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவு வதற்கு சாத்தியம் இருப்பின் சானிடைசரை தவிர்த்துவிடலாம் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் சானிடைசரில் உள்ள ஆல்கஹால் வைரஸை கொல்வது மட்டுமல்லாமல்,கைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் கொல்லும் தன்மை கொண்டது.தொடர்ந்து சானிடைசரை கைகளுக்கு பயன்படுத்தும்போது வறட்சி ஏற்படும். சரும செல்கள் உதிரும் பிரச்சினையும் உண்டாகும். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சுகாதார சேவைகளின் கூடுதல் இயக்குனர் ஆர்.கே.வர்மா கூறுகையில்,’இதுபோன்ற வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பாக இருப்பதற்கு முக கவசம் அணியுங்கள். அடிக்கடி சூடான நீரை பருகுங்கள். நன்றாக கைகளை கழுவுங்கள். ஆனால் சானிடைசர் அதிகம் பயன்படுத்த வேண்டாம்’ என்கிறார்.