வடக்கு மக்களுக்கு ஓர் நற்செய்தி..கொழும்பு IDH வைத்தியசாலைக்கு நிகரான வசதிகளுடன் கிளிநொச்சியில் நாளை திறக்கப்படும் மருத்துவமனை.!!

வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை(Infectious Disease Hospital for Northern Province) நாளை (11) புதன்கிழமை கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.

தற்போது 200 நோயாளர்கள் ஒரே தடவையில் தங்கி சிகிச்சை பெறும் வகையில்அமைக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலையானது, எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு அதிவிசேட தொற்றுநோயியல் ஆய்வுகூடங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் கொழும்பு தேசிய தொற்றுநோய் சிறப்பு மருத்துவமனைக்கு
(Infectious Disease Hospital- Colombo) ஈடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.இதன்மூலம் தொற்றுநோய்களுக்கான விசேட சிகிச்சைக்கென இதுவரைகாலமும் கொழும்பு செல்ல வேண்டியிருந்த வடபகுதி மக்கள் எதிர்காலத்தில் குறித்த வைத்தியசாலையிலேயே பலனடைய முடியும். அதாவது கொரோனாவுக்கு பின்னரும் குறித்த வைத்தியசாலை, வடக்கிற்கான தொற்று நோயியல் விசேட வைத்தியசாலையாக இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் கொரொனா தொற்றுப்பரவல் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் மத்திய சுகாதார
அமைச்சின் ஊடாக உலக வங்கியிடம் வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவினைச்
சமர்ப்பித்து, அனுமதியைப் பெற்றதுடன், மிகக் குறுகிய காலத்தில் வைத்தியசாலையின் முதலாம் கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்து, திறந்துவைப்பதில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியகலாநிதி சரவணபவன் அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தமை பலராலும் பாராட்டப்படுகிறது.