கம்பஹா மாவட்டத்தில் பல பொலிஸ் பிரிவுகளிலும் இன்று திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு இன்று முதல் தளர்த்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று தமது அன்றாட கருமங்களை மேற்கொள்ள முடியும் என பொது மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆயினும், இன்று முதல் ஊரடங்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டதை அடுத்து மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

நீர்கொழும்பு மீனவர்கள் தமது மீன்களை விற்பனை செய்ய முடியாததன் காரணமாக தமது படகுகளை களப்பிலும் கரையோரங்களிலும் நிறுத்தி வைத்திருப்பதை காண முடிந்தது.அத்துடன் கருவாட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் தமது கருவாடுகளை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை காண முடிந்தது. இதேவேளை, நகரில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் வீதித் தடைகளில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அத்தியாவசிய தேவைக்கு செல்வோர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.