யாழில் நடந்த கோர விபத்து..இளம் மதகுருவுக்கு நேர்ந்த துயரம்..!!

யாழ்ப்பாணம் முள்ளி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இளம் மதகுரு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மணியந்தோட்டம் அரியாலை பகுதியைச் சேர்ந்த அந்தன் ரமேஷ் சயந்தன் வயது 26 என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று மாலை மேற்படி மதகுருவும் அவருடைய சகோதரர் ஒருவருமாக மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி சென்றுள்ளனர்.

இதன் போது இவர்கள் முள்ளிசந்தியில் வீதியின் வலது பக்கம் திரும்புவதற்கு வீதியின் மத்திய கோட்டுக்கு வந்துள்ளனர். இதன் போது பின் பக்கமிருந்து அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வலது பக்கம் சென்று இவர்களை மோதித் தள்ளியது. சம்பவ இடத்தில் மதகுரு சயந்தன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்.அத்துடன் அவரது சகோதரரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். இருவரும் வீதியால் சென்றவர்களினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இன்றையதினம் மேற்படி மதகுரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.