யாழ்ப்பாண விடுதிகளில் பெருமளவு மேல் மாகாணத்தவர்கள் தனிமைப்படுத்தல்..!! யாழ் மக்களுக்கு விடுக்கப்படும் முன்னெச்சரிக்கை.!

யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலுமுள்ள ஹொட்டல்கள், விடுதிகளில் பெருமளவானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரோ, அதற்கு முன்னரோ மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்கள் பலரே இவ்வாறு தங்கியுள்ளனர். யாழிலுள்ள பிரபல ஹொட்டல்கள் தொடக்கம் சாதாரண விடுதிகள் வரை பலவற்றில் இவ்வாறு மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் நேற்று 9 வயதான சிறுமியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். கொழும்பு விடுதியொன்றில் பணியாற்றும் தந்தையுடன் விடுதியொன்றில் தங்கியிருந்து விட்டு வந்தவரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் முறையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், ஹொட்டல்கள், விடுதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதேவேளை, விடுதி பணியாளர்கள் வீடுகளிற்கு சென்று வருகிறார்கள்.இலங்கையில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் மூலம் எதுவென்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் சில சாத்தியங்கள் ஆராயப்பட்டுள்ளது. அதிலொன்று, உக்ரேனிய விமான பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹொட்டலின் சில ஊழியர்கள் வீடுகளிற்கு சென்று வந்தது. அங்கிருந்த உக்ரேனியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. பின்னர், வீடுகளிற்கு சென்று வந்த சிலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். பின்னர், மினுவாங்கொட கொத்தணி உருவானது.யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் மேல் மாகாணத்தை சேர்ந்த யாரும் இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை. இதுவரை நிம்மதியடையலாம். ஆனால் இந்த நிம்மதி நிரந்தரமாகுவதற்கு முறையான தனிமைப்படுத்தல் அவசியம்.விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், உணவ வழங்குபவர் உள்ளிட்ட பல ஊழியர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, மேல் மாகாணத்திலிருந்த வந்த தங்கியுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விடுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படா விட்டால், அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஏற்படாமல் விடவும் வாய்ப்புள்ளது. அது அதிர்ஷ்டத்தை பொறுத்தது.அதை நிச்சயப்படுத்தும் பொறுப்பு சுகாதார அதிகாரிகளுடையது.