அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020: ஜோ பைடன் முன்னிலையில்..!! புளோரிடாவில் நெருக்கமான மோதல்..!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்..அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தற்போது வரை ஜோ பைடன் 131 தேர்தல் சபை வாக்குகளைப்பெற்று முன்னிலை வகிக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் 92 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபைகளில் 270 சபைகளை பெறுபவரே ஜனாதிபதி ஆக முடியும். கலிபோர்னியாவில் 55, டெக்சாஸில் 38, நியூயோர்க் மற்றும் புளோரிடாவில் தலா 29, பென்சில்வேனியாவிலும், இல்லினாய்சிலும் தலா 20, ஓஹியோவில் 18, ஜோர்ஜியாவிலும், மிச்சிகனிலும் தலா 16, வட கரோலினாவில் 15 வாக்குகள் உள்ளன. இந்த மாகாணங்கள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.

நேற்று வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.ட்ரம்ப், ஜோ பைடன் இருவரும் 12 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புளோரிடா மாகாணம் ட்ரம்புக்கு சாதகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புளோரிடாவில் ஜனாதிபதி ட்ரம்ப் 55 இலட்சத்து 96 ஆயிரத்து 644 வாக்குகளுடன் 51.2 % வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பைடன் இங்கு 47.8% வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜோர்ஜியா, நோர்த் கரோலினா ஆகியவற்றிலும் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். ஓஹையோவில் கடைசி நிலவரப்படி ஜோ பைடன் திடீரென முன்னிலை வகிக்கிறார்.

ஒக்லஹாமா, கென்டகி, இன்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விர்ஜினியாவில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நியூயோர்க், நியூஜெர்ஸி, மேரிலாண்ட், மாசாசுசெட்ஸ், வெர்மாண்ட்டில் பைடன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் முன்னிலை வகித்தாலும், அதிக தேர்தல் சபைகளை கைப்பற்றுபவரே ஜனாதிபதியாக முடியும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி அதிக வாக்கை பெற்றிருந்தாலும், ட்ரம்ப் அதிக தேர்தல் சபைகளை கைப்பற்றினார். இம்முறை, இதுவரை ஜோ பைடன் அதிக தேர்தல் சபைகளை கைப்பற்றியுள்ளார்.