யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் ஆறுதலான செய்தி.. நாளை முதல் ஆரம்பம்..!!

யாழ். மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கான ஐயாயிரம் ரூபாய் நிவாரணப் பொதி நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த நிவாரணப் பொதிகள் அந்தந்தக் கிராம சேவகர்கள் ஊடாக தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.யாழ். மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் தரவுகள் கடந்த முதலாம் திகதி உரிய செயலணிக்கு அனுப்பப்பட்டு இரண்டாம் திகதி நிவாரணம் வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.எனவே, முதற்கட்டமாக யாழ். மாவட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் சுயதனிமைப்படுத்தலில் உள்ள 509 குடும்பங்களுக்கு நாளைய தினத்திலிருந்து நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணியதாக இன்றைய நிலைவரப்படி 772 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 700 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.