ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்துவதற்குத் திட்டம்..?

ஐ.பி.எல் தொடரினை, இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால், குறித்த விடயத்துக்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.இந்திய கிரிக்கெட் சபை ஐ.பி.எல். தொடரை ஒத்திவைக்கவுள்ளதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும், கொரோனா அச்சம் காரணமாக தொடர் நேற்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.இந்தநிலையில், ஐ.பி.எல். தொடரை இலங்கையில் நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் சபைக்கு முழு ஆதரவையும் வழங்க தயார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா ஊடகம் ஒன்றின் கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.ஐ.பி.எல். தொடர் நிறுத்தப்படுமாயின், தொடரின் பங்குதாரர்களுக்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நஷ்டம் ஏற்படும். எனவே, 2009ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் ஐ.பி.எல். தொடரை நடத்தியது போல், மற்றுமொரு நாட்டில் தொடரை நடத்த முடியும்”எனவே, நாம் இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பை தர விருப்பம் தெரிவித்துள்ளோம்.அதனை இந்திய கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் சபை கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தயாராகவுள்ளோம்.அதுமாத்திரமின்றி இலங்கையில் உள்ள சுகாதார பிரிவினரின் அனுமதி மற்றும் அவர்களுக்கு கீழ்பட்ட கண்காணிப்புடன் இந்த போட்டித் தொடரை நடத்துவதற்கும் நாம் வசதிகளை மேற்கொள்வோம்.இந்தத் தொடரை இலங்கையில் நடத்தும் பட்சத்தில், நாட்டுக்கும், கிரிக்கெட் சபைக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.