அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்.? 3 மாகாணங்களில் கிங் மேக்கர்களாக மாறும் இந்தியர்களது வாக்குகள்..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் முக்கிய பங்காற்றுகின்றன.

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், இந்திய நேரப்படி இன்று பிற்பகல், 3.30 மணிக்கு துவங்கியது. நாளை, 4ம் திகதி காலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.குடியரசுக் கட்சியின் சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.இந்தக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாகவும், மேலவை உறுப்பினராகவும், பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவரது தாய்க்கு தமிழகம் பூர்வீகமாகும். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர் என்பதால் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியர்களின் வாக்குகளை ஈர்ப்பதில் கமலா ஹாரிஸ் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் கூறப்படுகிறது.பொதுவாகவே ஜனநாயக கட்சிக்கு தான் இந்தியர்கள் வாக்களிப்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்த முறை டொனால்ட் ட்ரம்ப் இதை மாற்றியமைக்க முடியுமா அல்லது ஜனநாயக கட்சி மீது இந்தியர்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்களா? நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 45 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் இதில் 26 லட்சம் பேர் அமெரிக்க குடிமக்களாக உள்ளனர். இதில் 19 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.அமெரிக்க வாக்காளர்களின் 0.82% இந்திய வம்சாவளியினர். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது 77% இந்திய அமெரிக்கர்கள் ஜனநாயக கட்சிக்கு வாக்களித்தனர். இந்த முறை கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளது இந்திய அமெரிக்கர்களை ஜனநாயகக் கட்சி பக்கம் இன்னும் அதிகமாக சாய்ந்துள்ளது. எனினும், அங்கு தொழில்முனைவோராக இருக்கும் இந்தியர்கள் டொனால்ட் ட்ரம்ப்புக்குத்தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் 72 சதவீத இந்திய அமெரிக்கர்கள் ஜோ பிடனுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக கூறியுள்ளனர். 22 சதவீதம் பேர் ட்ரம்புக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் பொருளாதாரம், பொது சுகாதாரம், தங்களது எதிர்காலம் உள்ளிட்டவற்றைதான் அவர்கள் கணக்கில் எடுப்பார்கள். இந்திய-அமெரிக்க உறவு பிரச்சினை இரண்டாம்பட்சம்தான். பிற தேர்தல்களை விட இந்த தேர்தலில் இந்திய அமெரிக்கர்களின் வாக்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் உள்ளது. அமெரிக்காவில், சில மாகாணங்கள் battle-field என்று அழைக்கப்படுகின்றன. அதாவது எந்தக் கட்சிக்கு சார்பாக அந்த மாகாணம் செல்லும் என்பதை கணிக்க முடியாத மாகாணங்களை இவ்வாறு அழைக்கிறார்கள். அதில் இந்தியர்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதுதான் அனைவரது எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம்.ஃப்ளோரிடாவில் 1 லட்சத்து 28 ஆயிரம், இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர். பென்சில்வேனியாவில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர், ஜார்ஜியாவில் 96 ஆயிரம் பேர் உள்ளனர். இவையெல்லாம் எந்தக் கட்சியின் பக்கம் சாயும் என்று கூற முடியாத battle-field மாகாணங்கள்தான். எனவே இந்தியர்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆம்.. 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் ஓட்டுக்கள் கூட இந்த மாகாணங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.ஜனநாயக கட்சிக்கு ஆதரவு குறைகிறது.அதேநேரம், ஜனநாயக கட்சிக்கு பாரம்பரியமாக அளிக்கும் ஆதரவை இந்தியர்கள் குறைத்துக் கொண்டே வருகிறார்கள். 2008ஆம் ஆண்டு 92% அமெரிக்க-இந்தியர்கள், ஜனநாயக கட்சியின், பராக் ஒபாமாவுக்கு வாக்களித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு 80% இந்திய அமெரிக்கர்கள் ஓட்டு போட்டனர். ஜோ பிடனுக்கு தற்போது 77 சதவீதம் ஆதரவு தெரிவிப்பதாக கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். அதாவது, ஜனநாயக கட்சிக்கு இந்தியர்கள் வழங்கும் ஆதரவு கணிசமாக குறைந்து கொண்டு வருகிறது. எனவே, கமலா ஹாரீஸ்தான் இவர்கள் வாக்குகளை கவருவதில் முக்கிய பங்காற்றப்போகும் துருப்புச் சீட்டு என்கிறார்கள்.