கோமாவிலிருந்து குணமாகி தனது குழந்தையின் முகத்தை முதல் முறையாகப் பார்த்த தாய்..!!

கொரோனா வைரஸால் கோமாவுக்கு சென்ற கர்ப்பிணி பெண் தான் குணமடைந்த பிறகு தனது குழந்தையை முதல் முறையாக பார்த்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது. கொரோனாவால் பேரிழப்புகளை சந்தித்துவருகிறது அமெரிக்கா. அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். மேலும், உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவின் லாங் தீவை சேர்ந்த யானிரா சோரியானோ என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பிரசவத்திற்கு முன்பே கோமாவிற்கு சென்றுள்ளார். அவர் கோமாவில் இருந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தை பிறந்த பிறகும் 2 வாரங்களாக தீவிர சிகிச்சையில் இருந்த யானிரா சோரியா தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அவர் வீட்டிற்கு செல்லும் முன் அவரது கணவர் மருத்துவமனையின் வளாகத்தில் அவரது குழந்தையை தாயிடம் காண்பித்தார். கோமாவில் இருந்து மீண்ட தாய் குழந்தையை முதல்முறையாக பார்த்தபோது இறுக்கி அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினார்.பின்னர் அங்கிருந்த மருத்துவர்கள் கைதட்டி அன்புடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.