மேல்மாகாணம் உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் பணிபுரியும் அரச ஊழியர்களுக்கும் இன்று முதல் வீட்டிலிருந்து வேலை.!!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மேல் மாகாணம் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறு பணியாற்றும் முறைமை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருவதாக பொதுநிர்வாக சேவை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வீட்டில் இருந்தே பணியாற்றும் முறைமையை மீண்டும் அமுல்படுத்துமாறு மேல் மாகாணம் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களிலுள்ள அரச நிறுவனங்களுக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டது.இது தொடர்பிலான சுற்றுநிரூபம் ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அனைத்து அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பாக வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுகின்றது.குறித்த மாவட்டங்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அபாய வலயமாக பெயரிடப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள அரச நிறுவனங்களில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சுய – தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கோருவதற்கு நிறுவனத்தின் தலைவருக்கு அதிகாரம் இருப்பதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும், இலேசான அல்லது கொரோனா அறிகுறிகள் தென்படும் ஊழியருக்கு எவ்வித பணியும் வழங்கப்பட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பொது மக்களுக்கு நேரடியாகச் சேவைகளை வழங்க அனைத்து நிறுவனங்களும் இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், சுங்கம், நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி மேற்கொள்ளவேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.