இலங்கையில் தலைவிரித்தாடும் கொரோனாவின் இரண்டாவது அலை..!! நாட்டின் பொருளாதாரத்திற்கு வீழ்ந்த பேரிடி…!!

இலங்கைத் தீவு பொருளாதார ரீதியாக மேலும் பலவீனமான நிலையை அடைந்திருக்கின்ற சூழலில் தான், கொரோனாவின் இரண்டாவது அலை தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.

இப்போது நிலவுவது, இரண்டாவது அலையே இல்லை என்றும், இன்னமும் சமூகத் தொற்றாக மாறவில்லை என்றும் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை அரச அதிகாரிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், முதல் அலையை விட மூர்க்கத்தனமானதாக இப்போதைய அலை காணப்படுகிறது.நாட்டில் நிலைமை படுமோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை சாதாரண மக்களால் ஊகிக்க முடிகிறது, உணர முடிகிறது.முதல் அலை தாக்கிய போது, நாடு பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தது.அந்நியச் செலவாணிக் கையிருப்பு தேய்ந்து போயிருந்தாலும், சமாளிக்கக் கூடிய நிலையில் அரசாங்கம் காணப்பட்டது.ஆனால், இப்போது மிகமோசமான பொருளாதாரச் சூழலுக்குள் தான், இரண்டாவது அலையின் உக்கிர தாண்டவத்தை எதிர்கொள்கிறது இலங்கை.முதல் அலையின் போது ஆங்காங்கே தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், முடக்க நிலையில் இருந்த போதும், உற்பத்தித் துறையினால் ஓரளவுக்காவது இயங்க கூடிய நிலை காணப்பட்டது.இதனால் நாட்டின் உற்பத்திகள் பெரியளவில் பாதிக்கப்பட்டதாக கூற முடியாது, அது உள்நாட்டு நிரம்பல் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகளுக்கு கை கொடுத்தது.ஆனால், இரண்டாவது அலை, நாட்டின் உற்பத்தித் துறையையும், ஒட்டு மொத்தமாக முடக்கிப் போடும் அளவுக்கு தீவிரமானதாக மாறியிருக்கிறது.ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே இப்போதைய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார உத்தியாக உள்ள நிலையில், உற்பத்தித் துறை தடங்கலின்றி இயங்கிக் கொண்டிருந்தால் தான், அந்த இலக்கை எட்ட முடியும்.கொரோனாவுக்குப் பின்னர், சுற்றுலாத் தொழிற்துறை முற்றாக செயலிழந்து விட்ட நிலையில், இலங்கைக்கு முக்கியமாக அந்நியச் செலவாணியை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது ஆடை ஏற்றுமதி துறை.அதற்குத் தான் இப்போது பேரிடி விழுந்திருக்கிறது. மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பரவிய தொற்று கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பல தொழிற்சாலைகளுக்குப் பரவியது.இதனால், நாட்டின் ஆடை உற்பத்தி துறை பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த துறை சார்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீடுகளுக்கு அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.