நாடு எதிர்கொண்டுள்ள மற்றுமொரு ஆபத்து.! இராணுவ தளபதி எச்சரிக்கை.!!

கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் உயிரியல் மாதிரிகளை பரிசோதிப்பதற்காக கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த PCR இயந்திரம் பழுதடைந்துள்ளதால் சுமார் 20 ஆயிரம் பரிசோதனை முடிவுகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்த பரிசோதனை முடிவுகள் தாமதமாகி உள்ளதால் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது உட்பட நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கையாள்வது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் பாரதூரமான சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


250 மில்லியன் பெறுமதியான இந்த இயந்திரம் கடந்த மே மாதம் முல்லேரியா வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த இயந்திரம் கடந்த 6 நாட்களாக செயலிழந்து காணப்படுகிறது.பழுதடைந்துள்ள இந்த இயந்திரத்தை அடுத்த 48 மணி நேரத்திற்கு பழுது பார்க்க தேவை நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த PCR இயந்திரம் விலை மனு கோரல் நடைமுறைகளுக்கு புறம்பான வகையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளராக ஒருவரது பெயர் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாக இரசாயன ஆய்வுக்கூட ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.குறித்த நபர் இரசாயன ஆய்வுக் கூட நிறுவனத்தை சேர்ந்தவர் அல்ல எனவும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் இணைந்து மேற்கொண்ட மோசடியின் பிரதிபலனே இயந்திரம் பழுதடைய காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.