சிகிச்சை பெற்று வந்த பிரபல நாட்டுப்புறப் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா மறைவு..!!

சென்னை: பிரபல நாட்டுப்புறப் பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 83. பிரபல நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா. இவர் தூள் படத்தில், நடித்ததன் மூலம் பிரபலமானார்.அந்தப் படத்தில் இடம்பெறும் ‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி’என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் அவரை அடையாளம் காட்டியது.

மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்த இவர், ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். பிறகு பட வாய்ப்புகள் வரவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு அவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்க இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.