ஐ.பி.எல் 2020: சிராஜின் அபார பந்துவீச்சின் மூலம் கொல்கத்தாவை சுருட்டியது பெங்களூர் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 39ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஓய்ன் மோர்கன் 30 ஓட்டங்களையும், லொக்கி பெர்குசன் ஆட்டமிழக்காது 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பெங்களூர் அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், சஹால் 2 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதனைத்தொடர்ந்து, 85 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பெங்களூர் அணி, 13.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பெங்களூர் அணி, 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, தேவ்தத் படிக்கல் 25 ஓட்டங்களையும், குர்கீரட் சிங் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் லொக்கி பெர்குசன் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 ஓவர்கள் வீசி இரண்டு மெய்டன் அடங்களாக 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளிய மொஹமட் சிராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் பந்துவீச்சாளரொருவர் தொடர்ச்சியாக இரண்டு மெய்டன் ஓவர்களை வீசிய முதல் சந்தர்ப்பமாக இது சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.