20ம் திருத்தச் சட்டம் குறித்த வாக்கெடுப்பு இன்று! எதிர்க்கட்சியினர் சிலர் ஆதரவாக வாக்களிக்க இணக்கம்..?

20ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற வாக்கெடுப்பு இன்றைய தினம் மாலை நடைபெறவுள்ளது. 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதம் இன்றைய தினமும் மேற்கொள்ளப்பட உள்ளது.இன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 7.30 வரையில் விவாதம் நடாத்தப்பட உள்ளது.20ம் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.எனினும், எதிர்க்கட்சியின் சிலர் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இவ்விவாதத்தில் கலந்துகொள்ள, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கொரோனா பரவலை தடுக்கும் வகையிலான பிரத்தியேக பாதுகாப்பு ஆடை (PPE) அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, கைது செய்யப்படும் நபர்கள் நீர்கொழும்பிலுள்ள பல்லன்சேனவிலுள்ள இளம் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். அதற்கமைய, ரிஷாட் பதியுதீன் எம்.பியும் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இன்றைய (22) முக்கிய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, இவ்வாறு பிரத்தியேக பாதுகாப்பு அங்கி அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில், கருத்துகளை பெறும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.டி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.பொதுமக்கள், சிவில் அமைப்புகள் இது தொடர்பில் எந்தவொரு மொழியிலும் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் யோசனையை முன்வைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.