வட இலங்கையில் அகழ்வு நடவடிக்கையில் மீட்கப்பட்ட பண்டைத் தமிழர்கள் பயன்படுத்திய புரதானப் பொருட்கள்!!

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புறண்டிவெளி கிராமத்தில், புறண்டிவெளி குளக்கட்டுக்கு அருகாமையில் உள்ள மேட்டு நிலப்பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்ட போது புரதான பொருட்கள் சில கண்டுபிடிக்கப்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.கிறிஸ்கந்தகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலப்பகுதியை சேர்ந்தவை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 2 கத்தி வடிவிலான வெட்டும் உபகரணங்களையும் உள்ளிட்ட பல பொருட்களை மீட்டு நானாட்டான் பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.குறித்த பொருட்கள் தொடர்பாக மன்னார் தொல்பொருள் திணைக்களத்திற்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த திணைக்களத்தினர் கடந்த திங்கட்கிழமை மாலை நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் குறித்த பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன், அதை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.அத்துடன் மீட்கப்பட்டுள்ள குறித்த பொருட்கள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை நானாட்டான் பிரதேச பகுதியில் கடந்த மாதம் பண்டைய கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.