இலங்கையில் 2 வயதுப் பெண் குழந்தைக்கும், தாயாருக்கும் கொரோனா.!!

கொழும்பு றிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருந்த 2 வயது பெண் குழந்தைக்கும், அவரது தாயாருக்கும் கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந்த குழந்தையின் தந்தை கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி சந்தேகத்திற்குரிய மூன்று நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எமக்கு ஏற்பட்ட இந்த சந்தேகம் காரணமாக அவர்களை தனியான இடத்தில் வைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுத்தோம்.நேற்றைய தினம் கிடைத்த PCR பரிசோதனை முடிவுகளின்படி தாய் மற்றும் 2 வயதான பெண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.இவர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள். தகவல்களை தேடிய போது குழந்தையின் தந்தை கொரோனா தொற்றாளர் எனத் தெரியவந்துள்ளது.தந்தை பொரள்ளை பிரதேசத்திற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வரும் நபர். எமது மருத்துமனையின் ஊழியர்கள் எவருக்கும் கொரோனா தொற்றாத வகையில் இந்த நோயாளிகளை கண்டுபிடிக்க முடிந்தமை மகிழ்ச்சியானது.

இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஐ.டி.எச். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.தேவையற்ற வகையில் றிஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறும், நோயாளிகள் தமது உண்மையான தகவல்களை மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் எனவும் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.