அதிகாலையில் முடிந்த மதுஷின் கதை.!! உண்மையில் நடந்தது என்ன?

சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்சித என்ற மக்காந்துர மதுஷ் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த மதுஷ், ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்ட இடமொன்றை காண்பிப்பதாக அழைத்து சென்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மதுஷ் இறந்ததாக பொலிசார் சொல்கிறார்கள்.இன்று (20) அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது.ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடமொன்றை பற்றிய தகவலை மதுஷ் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஒரு நபரை சூட்சுமமாக வரவழைத்து ஹெரோயினை பறிமுதல் செய்ய முயன்றபோது, துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மாளிகாவத்தை, அப்பிள் தோட்டத்திலுள்ள லக்சே அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்தது.மதுசூதனன் என்ற கடத்தல்காரருக்கு, மதுஷ் மூலம் அழைப்பேற்படுத்தி, குறிப்பிட்ட போதைப்பொருளை அந்த பகுதிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, அங்கு 10வது மாடியிலுள்ள வீடொன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.அந்த போதைப்பொருளை வாங்கச் செல்வதை போல மதுஷ் மற்றும் 16 பொலிசார் சென்றுள்ளனர்.அதிகாலை மூன்று மணியளவில் குடியிருப்பு படிக்கட்டுக்களில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, மறைந்திருந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.தொடர்ந்து வளாகத்தின் நடைபாதையில் நின்ற பொலிசார் மீதும் சூடு நடத்தப்பட்டது.இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே மதுஷ் கொல்லப்பட்டார்.கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணை நடத்தினார். மதுஷின் உடலை அவரது சட்டபூர்வ மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.