தீமைகள் அகன்று வாழ்வில் ஒளியைத் தரும் நவராத்திரி

நவராத்திரி பண்டிகை நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது. நவராத்திரியின் மூன்றாம் நாள் இன்றாகும். நவராத்திரி பண்டிகை நாட்களில் அம்பிகையை 3 விதமாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.

துர்க்கையே முதல் மகளாக இருப்பதால் நவராத்திரியின் முதன் மூன்று நாட்களும் துர்க்கைக்கு வழிபாடு நடத்தப்படுகின்றது. இராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள்.துர்க்கை தீமையை அழித்து நன்மையைத் தரும் சக்தி கொண்டவள், நம் முடைய உள்ளத்தில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தக் கூடியவள். வீரத்தின் சொரூபமாக விளங்குபவள்.நவராத்திரியின் முதல் மூன்று நாட்களான இன்று வரை துர்க்கை வழிபடப்படுகிறாள். நாளை தொடக்கம் அடுத்து வரும் மூன்று நாட்களும் லட்சுமியை வழிபடுகிறோம். இறுதி 3 நாட்கள் சரஸ்வதியை வழிபடுகிறோம். 10-வது நாள் அம்பிகையை விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள். துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். இலட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம்,உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரசுவதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.நவராத்திரியில் அம்பாளுக்கு விதவிதமான சுண்டல் பாயச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு.. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள்.இதனால், பூமி சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால், தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு என்பது நம்பிக்கை ஆகும்.