ஐபிஎல் 2020- தவான் அதிரடியால் சென்னை அணியை மிரட்டிய டெல்லி அபார வெற்றி..!!

ஷார்ஜாவில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் சீசனின் 34வது லீக் ஆட்டத்தில் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது.அணியில் அதிகபட்சமாக டுப்லெஸி, வாட்சன் அமைத்துக் கொடுத்த பார்ட்னர்ஷிப்பை பயன்படுத்தி ராயுடுவும், ஜடேஜாவும் டெல்லி பவுலர்களை மிரட்டி ஆடினர்.
இதையடுத்து, 180 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர் பிரித்வி ஷா, ரன்னே அடிக்காமல் முதல் ஓவரிலேயே அவுட்டாக, தவானுடன் ஜோடி சேர்ந்த ரஹானே, 8 ரன்களில் சாம் கரனின் அருமையான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.அதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடினார். தவானும் ஷ்ரேயாஸ் ஐயரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்தனர்.ஷ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், 14 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 7 பந்தில் 4 ரன்கள் மட்டுமே அடித்து, 19வது ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார்.ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடனும் சிறப்பாகவும் ஆடிய தவான், 19வது ஓவரில் சதமடித்தார். இதுதான் ஐபிஎல்லில் தவானின் முதல் சதம்.
19-வது ஓவரை வீசிய சாம் கரன் அருமையாக வீசி அந்த ஓவரில் ஒரு கேரியை வீழ்த்தியதுடன் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.அதனால் கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட, கடைசி ஓவரை ஜடேஜாவிடம் கொடுத்தார் தோனி.கடைசி ஓவரை பிராவோவிடம் கொடுக்காமல் ஜடேஜாவிடம் கொடுத்தது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்திருக்கும்.கடைசி ஓவரின் முதல் பந்தில் தவான் சிங்கிள் அடிக்க, அடுத்து 3 சிக்ஸர்கள் விளாசி, டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் அக்ஸர் படேல்.இதையடுத்து 14 புள்ளிகளை பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.