ஐ.பி.எல்..ஏ.பி.டிவில்லியர்ஸின் வெறியாட்டத்தில் கதிகலங்கிய ராஜஸ்தான்..அசத்தல் வெற்றி பெற்ற பெங்களுர்..!!

ஏ.பி.டிவில்லியர்ஸின் வெறியாட்டத்துடன் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியானது 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. 13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 33 ஆவது ஆட்டம் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ர்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமாகியது.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 177 ஓட்டங்களை குவித்தது.178 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணியின் முதல் விக்கெட் 23 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.அதன்படி ஆரம்ப வீரராக களமிறங்கிய ஆரோன் பின்ஞ்ச் 4 ஆவது ஓவரின் மூன்றாவது மூன்றாவது பந்து வீச்சில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து அணித் தலைவர் விராட் கோலி களமிறங்கி தேவ்தூத் பாடிக்கலுடன் கைகோர்த்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இதனால், பெங்களூரு 5 ஓவர்களுக்கு 39 ஓட்டங்களையும், 10 ஓவர்களுக்கு 77 ஓட்டங்களையும், 13 ஓவர்களின் நிறைவில் 102 ஓட்டங்களையும் குவித்தது.இதனிடையே படிக்கல் 13 ஆவது ஓவரின் இறுதிப் பந்து வீச்சில் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய டிவில்லியர்ஸுடன் விராட் கோலி கைகோர்த்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 13.1 ஆவது ஓவரில் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.விராட் கோலியின் வெளியேற்றத்தையடுத்து குர்கீரத் சிங் மான் களமிறங்க டிவில்லியர்ஸ் அவரது அதிரடியை வெளிக்காட்ட ஆரம்பித்தார்.குறிப்பாக 19 ஆவது ஓவரை எதிர்கொண்ட வில்லியர்ஸ் அந்த ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசித் தள்ளினார். அந்த ஓவரில் மொத்தமாக 25 ஓட்டங்கள் பெறப்பட்டது.

இறுதியாக 6 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் என்ற நிலை வந்தபோது வில்லியர்ஸின் இறுதி சிக்ஸருடன் பெங்களூரு அணி 19.4 ஆவது ஓவரில் ராஜஸ்தான் நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.ஆடுகளத்தில் டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 55 ஓட்டங்களுடனும், குர்கீரத் சிங் மான் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.இதேவேளை சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ள மற்றொரு போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளன.இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மனித்துள்ளது.