கிழக்கில் குட்டி ஜனாதிபதியின் ஆதிக்கம்..நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பெரும் கவலை..!

அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாங்கள் தான் இந்த அரசாங்க அதிபரை கொண்டுவந்தோம் என சொன்னவர்கள் தற்போது அரச அதிபர் ஒருவருக்கு அநீதி நடக்கும் போது மௌனமாக உள்ளனர். அவர்களது எஜமானர்களின் தவறான முடிவையும், தலையாட்டி பொம்மைகளாக இருந்து ஆதரிப்பதையும் பார்க்க கவலையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டு பத்து மாதங்கள் தான் ஆகின்றது. அதற்குள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இந்த இடமாற்றத்தை நான் கலாமதி பத்மராஜாவின் இடமாற்றமாக பார்க்கவில்லை. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமாகவே பார்க்கின்றேன்.நாம் எப்போதும் அரச அதிகாரிகளின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அரச அதிகாரிகள் சரியான முறையில் செயற்படும்போது அவர்களுக்கு அழுத்தங்கள் உருவாவதுடன் இடமாற்றங்களும் வழங்கப்படுகின்றன. இதனாலேயே, அரச அதிகாரிகள் தங்களது கடமையினை மேற்கொள்ள தயங்குகின்றனர்.இடமாற்றம் தொடர்பில் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும், மண் தொடர்பான அனுமதி தொடர்பான பிரச்சினை, மயிலித்தே மடு தொடர்பான பிரச்சினை,அரசுக்கு ஆதரவான சிலரை இடமாற்றிய செயற்பாடுகள் தொடர்பாகவே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன்.மயிலித்தே மடு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவர் கிழக்கு மாகாணத்தின் குட்டி ஜனாதிபதியாக இருந்து தன்னுடைய வேலைத்திட்டத்தை திணிப்பதாக உள்ளது.எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கி சரியான முறையில் செயற்படுகின்றவரே ஆளுநராக இருக்க வேண்டும். மாறாக தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரி என நினைக்கின்றவர் பொருத்தமற்றவர் எனத் தெரிவித்தார்.