வடக்கின் 5 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் கொரோனா வைத்தியசாலைகள்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், வைத்தியசாலைகள் நிரம்பும் நிலைமையேற்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய கொரோனா வைத்தியசாலைகளை அமைக்கும் பணியை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதன்படி, வடக்கில் 5 மாவட்டங்களிலும் ஒவ்வொரு கொரோனா வைத்தியசாலைகள் அமைக்கப்படவுள்ளன.இதன்படி வடக்கில் யாழ் மாவட்டத்தில் மருதங்கேணியிலும், கிளிநொச்சியில் கிருஷ்ணபுரத்திலும், முல்லைத்தீவில் மாங்குளத்திலும், மன்னாரில் விடத்தல்தீவிலும், வவுனியாவில் மாமடு பிரதேசத்திலும் வைத்தியசாலைகள் அமைக்கப்படவுள்ளன.மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 50 நோயாளர்களும், கிருஷ்ணபுரத்தில் முன்னர் இராணுவ வைத்தியசாலை அமைந்திருந்த இடத்தில் 200 நோயாளர்களும், மாங்குளம் வைத்தியசாலை, மாமடு வைத்தியசாலை, விடத்தல் தீவு வைத்தியசாலைகளில் தலா 40 பேர் நோயாளர்களும் சிகிச்சை பெறும் வசதிகளுடன் வைத்தியசாலைகள் மாற்றப்படவுள்ளன.இந்த வைத்தியசாலைகளில் சில விடுதிகளே கொரோனா தொற்றாளர்களிற்காக ஒதுக்கப்படவுள்ளது. ஒதுக்கப்பட்ட விடுதிகளிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் வெளியேறாத விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு அமைக்கப்படுகிறது.சிசிரிவி கமரா பொருத்தப்படுவதுடன், மருத்துவர்கள் தொலைவில் இருந்தபடியே நோயாளிகளிற்கு அறிவுறுத்தல்களை வழங்கும் விதமான தொழில்நுட்ப ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.கிழக்கில் 4 கொரோனா வைத்தியசாலைகள் உருவாக்கப்படும் நிலையில் மேலும் 4 வைத்தியசாலைகள் உருவாக்கப்படவுள்ளன.