கொரோனாவினால் தொழில்களை இழந்தோரில் மேலும் பல பிரிவினருக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு!

கொரோனா வைரஸ் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக வருமானமின்றி தவிக்கும் மேலும் பல பிரிவினருக்கு அரசாங்கம் வழங்கி வரும் ரூபா 5,000 கொடுப்பனவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்கள், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், கைத்தறி மற்றும் மற்றும் புடவைக் கைத் தொழிலில் ஈடுபடுவோர், கைவினைப்பொருள் உற்பத்தியாளர்கள், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பராமரிக்க தகுதி பெற்றவர்கள், தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் ரூ. 5,000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

நேற்று (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள, செங்கல் மற்றும் மணல் விநியோகிப்போர், மேசன், தச்சு, ஓவியர்கள், இவர்களுக்கு உதவும் கூலியாட்கள் அத்துடன் கிராமங்களில் சிறு கைத்தொழில்களில் ஈடுபடுபவர்கள், பிரதேச அளவில் சேவைகளை வழங்குபவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.இது தவிர, கிராமங்களில் அமைக்கப்படும் குழுவினால் சிபாரிசு செய்யப்படுவோருக்கும், ஒரே தடவையில் வழங்கப்படும் ரூ.5,000 கொடுப்பனைவை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.குறித்த கிராமிய குழு எதிர்வரும் ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் கூடுவதோடு, ஏப்ரல் 20, 21, 22 ஆகிய திகதிகளில் இக்கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.