வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞனின் வித்தியாசமான முயற்சி!!தமிழையே தெய்வமாக வணங்கிப் போற்றும் தமிழ் மந்திரம்..!!

கோவில்களில் சமஸ்கிருதம் தவிர்த்துத் தமிழில் பூசை நடத்தப்பட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சூழலில் தமிழ்ச்சொல் கொண்டு தமிழையே தெய்வமாக வணங்கிப் போற்றும் மந்திரமாக ஒரு பாட்டு வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவரால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.ஈழத்துப் பாவலர் தவ சஜிதரன் எழுதிய தமிழ்த்தாய் அந்தாதியின் இரண்டு பாடல்கள் இசையமைக்கப்பட்டு யூட்யூப் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இலங்கையில் பிரபல திரைப்பட மேடைக் கலைஞரான மறைந்த (மரிக்கார்) ராமதாஸ் அவர்களின் புதல்வாரன சதீஷ் ராம்தாஸ் இசையமைத்த இந்தப் படைப்பை உலகப்புகழ் பெற்ற அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீட் கடந்த சனிக்கிழமை வெளியிட்டு வைத்தார்.இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய ‘சஹானா’ குறுந்திரைத் தொடரின் நாயகி காவ்யா சத்யதாஸ் தமிழ்த்தாய் அந்தாதிக் காணொளிப் பாடலில் தோன்றி அபிநயம் தந்திருக்கிறார்.இசையும் தமிழும் நாட்டிய அபநயங்களும் காட்சி அமைப்பும் மயிர்க்கூச்செறியச் செய்யும் விதமாக உள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.’நமது மண்ணின் பெருமைக்குரிய கவிஞர்’ என்று பாவலர் தவ சஜிதரனைக் குறிப்பிட்டிருந்த அப்துல் ஹமீட், சதீஷ் ராம்தாசின் இசை தமிழோடு கைக்கோக்கும் விதம் கண்டு நெஞ்சம் பெருமையில் நிமிர்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.விருது வென்ற கலைஞர் திலோஜன் படத்தொகுப்பையும் வடிவமைப்பையும் செய்திருக்கிறார்.